என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சேலம் சென்னை பசுமை சாலை"
சேத்துப்பட்டு:
சேலத்தில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில், மத்திய சாலை மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி கலந்து கொண்டார். அப்போது அவர் விவசாயிகளின் ஆதரவு பெற்று 8 வழிச்சாலை திட்டம் குறிப்பிட்ட தேதியில் தொடர நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.
இதை கண்டித்து திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் அடுத்த நம்பேடு கிராமத்தில் சென்னை- சேலம் 8 வழிச்சாலை எதிர்ப்பு இயக்கம் சார்பில் விவசாயிகள் கையில் கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது 8 வழிச்சாலை திட்டம் தொடரும் என பேசிய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி மற்றும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷம் எழுப்பினர்.
விவசாயிகளின் இந்த திடீர் ஆர்ப்பாட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
நாகர்கோவில்:
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் நடிகர் கமல்ஹாசன், நாகர்கோவில் நாகராஜா கோவில் திடலில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அவர் கூறியதாவது:-
கனிம வளம், மண் வளம் என மக்களை சுரண்டிவிட்டு காசை எங்கு கொண்டு செல்கிறார்கள். நாளை நோய்வாய்ப்பட்டு ஆஸ்பத்திரியில் கிடக்கும்போது பணம் பயன்படாது. அதனை கண்கூடாக பார்த்துவிட்டோம். நாளைய சமுதாயத்தை பற்றி எண்ணி பார்க்க வேண்டும்.
ஒரு கலைஞனாக வாழ்ந்து விட்டேன். எஞ்சிய வாழ்வை தொண்டனாக உங்களோடு கழிக்க விரும்புகிறேன். மத்திய மந்திரி (நிதின்கட்காரி) பேசுகிறார் 8 வழிச்சாலை வந்தே தீரும், கோர்ட்டு உத்தரவிட்டாலும் வந்து விடும் என்கிறார். யாருக்காக இந்த சாலை, மக்களுக்காகத் தானே, மக்கள் வேண்டாம் என்று சொன்ன பிறகு யாரிடம் யாரை விலை பேசுகிறீர்கள். எங்களுக்கு அது தெரிய வேண்டும். ஒரு தனிப்பட்ட வியாபாரிக்கு வருமானம் வர வேண்டும் என்பதற்காக இவர்கள் இங்கு வரக்கூடாது.
ஜாலியன் வாலாபாக் படுகொலை நடத்தியவர்கள், இங்கு ஆளவந்தவர்கள், தூத்துக்குடியில் நாம் நியமித்த அரசாங்கம் நம்மை நோக்கி சுட்டிருக்கிறது. இதற்கு காரணம் நாம் மெத்தனமாக இருந்தது, உரிமைகளை கேட்க மறந்தது.
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதமாக நிகழ்ந்தது. ஜல்லிக்கட்டு போராட்டம். அப்படி போராட்டம் மீண்டும் வராமல் ஜனநாயக முறையில் வெல்ல வேண்டும். அவ்வாறு வெல்ல முடியாவிட்டால் மீண்டும் ஜல்லிக்கட்டு போல் ஒரு போராட்டம் வரும். நான் அந்த கூட்டத்தில் இருப்பேன். இங்கு டாஸ்மாக் மழையில் நனைந்து கொண்டு சிலர் நின்று கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு விடிந்தால் நான் பேசியது புரியும். டாஸ்மாக் வீரர்கள் மக்கள் நீதிமய்யத்தில் ஓரங்கட்டப்படுவார்கள்.
எங்களுக்கு தொழிலுக்காக மக்கள் சாக வேண்டும் என்றால் அந்த தொழில் இங்கு தேவையில்லை. மேற்கு கடற்கரையில் கப்பல் கட்டும் பாதைகள் உள்ளதுபோல் கார் தொழிற்சாலைகள் வரலாம். வேலைகளை வழங்க முடியும். ஆலைகளை உருவாக்க முடியும்.
ஐ.பி.எல். போட்டியை தடுக்க சென்றவர்களிடம் நான் கூறினேன். சற்று தள்ளி செல்லுங்கள், 234 பேர் கோட்டையில் விளையாடுகிறார்கள். அவர்களை அங்கிருந்து அகற்ற வேண்டும் என்று கூறினேன். அதில் இப்போதும் நான் உறுதியாக உள்ளேன். அந்த விளையாட்டை நிறுத்த ஆரம்பம் ஏப்ரல் 18-ந் தேதி.
இது ஒரு புரட்சியின் அமைதியான ஆரம்பம் தான். இனி செல்லும் தூரம் நிறைய இருக்கிறது. எங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள இடங்களில் இவ்வளவு சிறப்பான இடத்தை வேறு எங்கும் ஒதுக்கவில்லை. மேடை போட்ட பின்பு அதனை அகற்ற கூறுவார்கள். ஊருக்குள் வரக்கூடாது என்று ஊருக்கு வெளியே பேச சொல்வார்கள். வந்தால் பேசக்கூடாது என்பார்கள். இத்தனையும் கடந்து மக்கள் நீதி மய்யம் மக்களை சென்றடைந்துள்ளது.
திறமையானவர்கள் பலர் காவல்துறையில் இருக்கிறார்கள். ஆனால் சிலரை ஏவல் துறையாக மாற்றி இருக்கிறது இந்த அரசு. எனவே இந்த அரசாங்கம் அகற்றப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நான் எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டு சரியாக செயல்படாவிட்டால் என்னை மாற்றி விடலாம் என்று வேட்பாளர் எழுதிக் கொடுத்த கடிதத்தை தொண்டர்கள் மத்தியில் நடிகர் கமல்ஹாசன் காண்பித்தார். #KamalHassan #ChennaiSalem8wayroad
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை, தண்டராம்பட்டு, ஆரணியில் தினகரன் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-
திருவண்ணாமலை என்பது ஒரு அக்னி ஸ்தலம். தீயவர்களையும், துரோகம் செய்பவர்களையும் அழித்துவிடும் அக்னியாக உள்ள இந்த தொகுதி மக்கள் தமிழ்நாட்டு மக்களுக்கு துரோகம் செய்பவர்களை அக்னியாக இருந்து அழிக்க வேண்டும். அ.தி.மு.க. மெகா கூட்டணி சார்பில் இந்த தொகுதியில் அக்ரி கிருஷ்ணமூர்த்தியை வேட்பாளராக நிறுத்தியுள்ளனர்.
மதச்சார்பற்ற கூட்டணி என்று தி.மு.க. சார்பில் கூறுகிறார்கள். கடந்த 15 ஆண்டு காலமாக காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. ஆட்சியில் மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் இருந்து மக்களை புறம்தள்ளி தனது குடும்பத்தார் மற்றும் உறவினர்களையே பாதுகாத்தவர்கள் இவர்கள். இவர்களின் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சி கர்நாடகாவில் ஆட்சிக்கு வந்தால் காவிரி மேலாண்மை வாரியத்தை கலைத்து விடுவேன் என தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளது.
8 வழி சாலை திட்டம் தற்போது நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டுள்ளது. மத்திய மந்திரி நிதின்கட்காரி சேலத்தில் நடைபெற்ற கூட்டத்தில் முதல் -அமைச்சர் முன்னிலையிலேயே விவசாயிகள் ஆலோசனை பெற்று மீண்டும் 8 வழி சாலை திட்டத்தை நிறைவேற்றுவேன் என கூறும் போது முதல் - அமைச்சர் வாய்மூடி கொண்டு அமர்ந்துள்ளார். இந்த 8 வழி சாலையானது 5 மாவட்ட விவசாயிகள் மற்றும் நீர் ஆதாரங்களை அழித்து தனியார் நிறுவனத்திற்காக அமைக்கப்படும் சாலை. மத்திய மந்திரி தேர்தல் நேரத்தில் எவ்வளவு தைரியமாக 8 வழி சாலையை அமைத்தே தீருவேன் என கூறுகிறார். இதனால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இந்த பகுதி மக்கள் அ.தி.மு.க.விற்கு வாக்களித்தால் இந்த பகுதி விவசாயத்தையும், பசுமையையும் அழித்து விடுவார்கள். இந்த 8 வழி சாலை வருவதால் தொழில் வளர்ச்சி பெறும் என சட்டமன்றத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். 8 வழி சாலை திட்டத்தை வரவேற்பதன் மூலம் தி.மு.க., பா.ஜ.க. உடன் மறைமுக கூட்டணி வைத்துள்ளது தெள்ளத்தெளிவாக தெரிகிறது. 8 வழி சாலையை எதிர்த்து அ.ம.மு.க. பல்வேறு போராட்டங்களை முன்னின்று நடத்தி உள்ளது. நீதிமன்றமே தடைவிதித்த அந்த 8 வழி சாலை திட்டத்தை நிறைவேற்றுவேன் என மத்திய மந்திரி கூறுவது தமிழ்நாட்டிற்கு துரோகம் செய்வது போன்றது.
ஏற்கனவே ஆர்.கே. நகரில் ஓட்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் கொடுத்து அ.தி.மு.க.வால் ஆட்சிக்கு வர முடியவில்லை. ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்களான நமக்குத்தான் அந்த மக்கள் வெற்றியை தந்தார்கள்.
இவ்வாறு அவர் பேசினார். #dinakaran #edappadipalanisamy #nitingadkari
நெல்லை:
சுகந்திர போராட்ட தியாகி சோமாயாசலு 29-வது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது படதிறப்பு விழா நெல்லை கொக்கிரகுளத்தில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இதில் காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் கலந்து கொண்டு படத்தை திறந்து வைத்து மாலை மணிவித்து மரியாதை செலுத்தினார்.
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன், முன்னாள் எம்.பி. ராமசுப்பு ஆகியோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை மாவட்ட தலைவர்கள் சங்கரபாண்டியன், எஸ்கேஎம். சிவக்குமார், பழனிநாடார் ஆகயோர் செய்திருந்தனர்.
பின்னர் குமரி அனந்தன் நிருபர்களிடம் கூறியதாவது:-
சுதந்திரத்திற்காக போராடிய தியாகி சோமாயாசலு 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருந்தார். அவரை நினைவு கூறும் வகையில் நெல்லை, பாளை பகுதியில் அவருக்கு சிலை அமைக்க வேண்டும். காங்கிரஸ் கட்சியின் தலையாய கொள்ளை மதுவிலக்குதான். அதற்காக காங்கிரஸ் தொடர்ந்து போராடும். கள்ளுக்கடை, சாராயக்கடைகளை முற்றிலும் ஒழிக்க வேண்டும். அரசு சுப்ரீம் கோர்ட் உத்தரவை மீறி தேசிய நெடுஞ்சாலைகளில் கடைகள் அமைக்க அனுமதி வழங்கியுள்ளது.
இந்த ஆட்சி மாற வேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர். தேர்தல் மூலம் இதை மக்கள் முடிவு செய்வார்கள். எல்லா துறைகளிலும் மோடி அரசு பின்தங்கிவிட்டது. வேலை வாய்ப்பு கொடுக்கவில்லை. தேர்தல் அறிக்கையில் கூறியவற்றை மத்திய அரசு நிறைவேற்றவில்லை. இந்த நிலை மாற பிரதமர் மோடி இடத்திற்கு ராகுல்காந்தி வர வேண்டும். அப்போது தான் மக்களுக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் செயல்படுத்த முடியும். வேலை வாய்ப்புகள் கொடுக்க முடியும் இமயத்தில் ஓடும் நதிகள் குமரி கடலில் கலக்கும் வகையில் நதிகளை இணைக்க வேண்டும். இந்த வழியாக நீர்வழிப்பாதை அமைக்க வேண்டும். 8 வழிச்சாலை,
தொழிற்சாலைகளுக்காக விவசாய நிலங்களை அழிக்க கூடாது. தரிசு நிலங்களில் அமையும் வகையில் செயல்படுத்த வேண்டும். ஸ்டெர்லைட் தொழிற்சாலை விவகாரத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும். இந்த ஆலையை நிரந்தரமா மூட வேண்டும். தமிழக காங்கிரஸ் தேர்தலுக்கு தயாராக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார். #kumariananthan #pmmodi #rahulgandhi
சேலம்:
சேலம்- சென்னை இடையே ரூ.10ஆயிரம் கோடி மதிப்பில் 8 வழி பசுமை சாலை அமைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதற்காக சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் நிலம் கையகப்படுத்தும் முதற்கட்ட அளவீடு பணி நடந்தது.
அப்போது விவசாயிகள், பொதுமக்கள், தங்கள் நிலங்களை சாலைக்கு எடுக்கக்கூடாது என்று கூறி எதிர்ப்பு தெரிவித்தனர். இது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கும் தொடர்ந்தனர்.
இதையடுத்து ஐகோர்ட்டு நிலம் கையகப்படுத்துவதற்கு தற்காலிகமாக தடை விதித்தது. இதனை தொடர்ந்து அரசு அதிகாரிகள் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தி விவசாயிகளிடம் கருத்துக்கள் மற்றும் அவர்களது கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்து வருகின்றனர்.
இந்த நிலையில் சாலைக்காக கையகப்படுத்தக்கூடிய நிலங்களின் விவரத்தை சர்வே எண்ணுடன் அரசு வெளியிட்டது. இதற்கு பாதிக்கப்படும் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். சேலத்தில் நேற்று முன்தினம் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.
இந்த சூழலில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 8- வழிச்சாலை அமைக்க நிலம் கொடுப்போரில் 89 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்து விட்டனர். 11 சதவீத பேர் மட்டுமே எதிர்க்கின்றனர். அவர்களின் நிலத்திற்கும் உரிய இழப்பீட்டை வழங்கி சாலை அமைக்கும் பணி மேற்கொள்ளப்படும்,’ என்று தெரிவித்தார்.
முதல்-அமைச்சரின் இந்த அறிவிப்பையடுத்து, சேலம் பூலாவரியில் நேற்று மாலை பாதிக்கப்படும் விவசாயிகள் கறுப்பு கொடி கட்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராமசாமி என்பவரது தோட்டத்தில் திரண்ட விவசாயிகள், தென்னை மரங்களிலும், வருவாய்த்துறையினரால் நடப்பட்ட நில எடுப்பு எல்லை கற்களிலும் கறுப்பு கொடியை கட்டி நில எடுப்புக்கு அனுமதிக்க மாட்டோம் என கோஷமிட்டனர்.
8 வழிச்சாலைக்கு மக்களிடம் ஆதரவு இருப்பதாக கூறுவது பொய். பாதிக்கப்படும் விவசாயிகள் மற்றும் 5 மாவட்ட பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம். ஏற்கனவே இருக்கும் சாலையை விரிவுப்படுத்திக் கொள்ள அரசு முன்வர வேண்டும். புதிதாக விளை நிலங்களை அழித்து சாலை அமைக்க விடமாட்டோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர். #chennaisalemexpressway #farmersprotest
மதுரை:
மதுரை விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நிருபர்களிடம் கூறியதாவது:-
மேகதாது அணை கட்டினால் தஞ்சை படுகை விவசாயிகளின் வாழ்வதாரம் மோசமாகி விடும். வரும்பாராளுமன்ற தேர்தலில் கர்நாடகாவில் அதிக இடங்களில் வெற்றி பெற பா.ஜ.க. வாக்கு அரசியல் நாடகம் நடத்துகிறது.
கர்நாடக அமைச்சர் தமிழக முதல்வரை சந்திக்க நேரம் ஒதுக்க கோரி விட்டு அணை பகுதியை பார்வையிடுவது நாடகம். மலைகள், நதிகளை பாதுகாக்க முடியாமல் அழிக்கின்றனர், உருவாக்க முடியாததை ஏன் அழிக்கின்றனர். மணல், மலை போன்றவற்றை 3 அடிக்கு எடுக்க அனுமதி வாங்கி விட்டு 30 அடி தோண்டுகின்றனர்.
8 வழிச்சாலைக்கு நிதி ஒதுக்கும் பிரதமருக்கு ,புயலால் பாதித்த மக்களை பார்வையிடவோ? நிதி ஒதுகவோ நேரம் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார். #seeman #pmmodi #gajacyclone
சென்னை:
சென்னை-சேலம் இடையே 277 கி.மீ தூரத்துக்கு 8 வழி பசுமை சாலைத்திட்டம் அமைக்கப்பட உள்ளது. சுமார் 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவில், ‘‘பாரத்மலா பரியோனா திட்டம்’’ கீழ் அமல்படுத்தப் படுத்தப்பட இருக்கும் இந்த பசுமை வழிச்சாலை காஞ்சீபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மாவட்டங்களில் அமைய உள்ளது. இந்த சாலைத் திட்டத்துக்கு சுமார் 1900 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது.
இந்த பசுமை வழிச் சாலைத் திட்டத்துக்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தங்கள் வாழ்வாதார நிலத்தை மத்திய- மாநில அரசுகள் பறிக்க கூடாது என்று போராட்டங்கள் நடத்தினார்கள். ஆனால் அதையும் மீறி பல இடங்களில் நிலம் கையகப்படுத்தும் பணியை அதிகாரிகள் மேற்கொண்டனர்.
கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருவண்ணாமலை மாவட்டங்களில் பல இடங்களில் நிலம் அளவிடப்பட்டு கற்கள் பதிக்கப்பட்டன. இதை எதிர்த்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதனால் பசுமை வழிச்சாலைத் திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்துவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
தற்போது இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், பவானி சுப்பராயன் ஆகியோர் கொண்ட டிவிசன் பெஞ்சில் நிலுவையில் உள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம் 15-ந்தேதி சென்னை ஐகோர்ட்டில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் சார்பில் அட்வகேட் ஜெனரல் ராஜகோபாலன் ஆஜரானார். அப்போது அவர் கூறுகையில், ‘‘8 வழி பசுமை சாலைத்திட்டத்தை மறுவரையறை செய்ய உள்ளோம். அதுவரை இந்த திட்டத்துக்காக நிலம் கையகப்படுத்தப்பட மாட்டாது’’ என்றார்.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் சில புதிய உத்தரவுகளை பிறப்பித்தனர். ‘‘தேசிய நெடுஞ்சாலைத் திட்டத்தின் கீழ் அறிக்கை வெளியிட்டு நிலம் கையகப்படுத்தக் கூடாது’’ என்று தடை விதித்தனர்.
இந்த நிலையில் சென்னை-சேலம் இடையே 8 வழி பசுமை சாலைத் திட்டத்தை நிறைவேற்ற மத்திய சாலைப் போக்கு வரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் தீவிரமாகி உள்ளது. காஞ்சீபுரம், திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மாவட்டங்களில் பசுமை வழி சாலைத்திட்டத் துக்கு நிலம் கையகப்படுத்த புதிய அறிவிக்கை வெளியிட்டு வருகிறது. மூன்று நாட்களுக்கு முன்பு தர்மபுரி, கிருஷ்ண கிரி, சேலம் மாவட்டங்களில் நிலத்தை கையகப்படுத்த புதிய அறிக்கை வெளியிடப்பட்டது.
தேசிய நெடுஞ்சாலைத் திட்டம் 1956-ன்படி இந்த அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதன்மூலம் இந்த மூன்று மாவட்டங்களிலும் பசுமை வழி சாலைத் திட்டத்துக்கு கையகப்படுத்த வேண்டிய மீதமுள்ள நிலங்களை கையகப்படுத்தும் நடவடிக்கைகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே காஞ்சீபுரம் மாவட்டத்தில் பசுமை வழி சாலைத் திட்டத்துக்காக கையகப்படுத்தப்பட வேண்டிய நிலம் தொடர்பாகவும் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் புதிய அறிவிக்கையை வெளியிட்டுள்ளது. காஞ்சீபுரம் மாவட்டத்தில் மொத்தம் 59.28 கி.மீ தொலைவுக்கு நிலத்தை கையகப்படுத்துவதற்கான உத்தரவாக அந்த அறிவிக்கை அமைந்துள்ளது.
அதன்படி ஸ்ரீபெரும் புதூர், செங்கல்பட்டு, உத்திர மேரூர் தாலுக்காக்களில் உள்ள நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன. 39 கிராமங்கள் வழியாக இந்த சாலை அமைய உள்ளதால் இந்த 3 தாலுக்காக்களிலும் மக்கள் பயன்படுத்தும் நிலங்கள் கையகப்படுத்தப்படும் என்று தெரியவந்துள்ளது.
39 கிராமங்களிலும் 1510 பேரின் நிலம் பசுமை வழி சாலைத் திட்டத்துக்கு எடுக்கப்பட உள்ளது. மத்திய அரசின் புதிய அறிவிக்கை காஞ்சீபுரம் மாவட்ட மக்களிடம் கடும் அதிர்ச்சியையும் அதிருப்தியையும் ஏற்படுத்தி உள்ளது.
பசுமை சாலை திட்டம் தொடர்பான வழக்கு சென்னை ஐகோர்டில் உள்ள நிலையில் புதிய அறிவிக்கை மூலம் இந்த திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசு தீவிரமாகியுள்ளது. இந்த திட்டத்தால் பொருளாதார வளர்ச்சி ஏற்படும் என்று கூறப்படுவதால் தமிழக அரசும் இந்த திட்டத்துக்கு முழு ஆதரவு தெரிவித்து உள்ளது. எனவே நிலம் கையகப்படுத்தும் பணி விரைவில் தொடங்கும் என்று தெரிகிறது. #chennaisalemexpressway
சேலம்:
சேலம்- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இரும்பாலை மெயின்ரோடு பிரிவில் சேகோசர்வ் எதிரில் ரூ. 22 கோடியில் கட்டப்பட்ட உயர்மட்ட மேம்பாலத்தை முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்து பேசியதாவது:-
8 வழிச்சாலை அமைப்பதற்கு நாம் முயற்சித்தோம். அது இன்னும் நடந்து கொண்டு தான் இருக்கின்றது. பல பேர் நீதிமன்றத்திற்கு சென்று இருக்கிறார்கள். நீதிமன்றத்தினுடைய வழக்கு முடிந்த பிறகு அந்த பணிகள் தொடங்கும்.சில பேர் 8 வழிச்சாலை சேலத்திற்கு தான் கொடுக்கிறார்கள் என்று சொல்கின்றனர். சேலம் வழியாகத்தான் இந்த சாலை செல்கிறது அவ்வளவு தான்.
இன்றைக்கு கோவையாக இருந்தாலும் சரி, கேரளாவாக இருந்தாலும் சரி, திருப்பூர், ஈரோடு, மதுரை, கரூர், திண்டுக்கல், நாமக்கல்லாக இருந்தாலும் சரி சென்னைக்கு போக வேண்டும் என்றால் சேலம் வழியாகத்தான் போக வேண்டும். சேலத்துக்கு மட்டும் தான் 8 வழிச்சாலை என்று தவறான கருத்தை சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள்.
முதல்-அமைச்சர் சேலத்தில் இருக்கிறார். அதனால் தான் சேலத்திற்கு 8 வழிச்சாலை கொடுத்தார் என்று சொல்கிறார்கள். எனக்கென்ன 10 தொழிற்சாலையா? சேலத்தில் ஓடிக் கொண்டி ருக்கிறது. 8 வழிச்சாலை போடுவதற்கு. ஒரு தவறான கருத்தை வைத்து எதிர்க்கட்சிகள் எல்லாம் தவறான விமர்சனம் செய்து கொண்டு இருக்கிறது.
நாளுக்கு நாள் வாகனத்தின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு இருக்கின்றது. கனரக வாகனம் அதிகமாக போயிக் கொண்டு இருக்கின்றது. இதனால் சாலையின் தேவையும் அதிகரிக்கின்றது. புதிய சாலைகள் அமைக்க வேண்டும். சாலைகள் விரிவுபடுத்த வேண்டும். அப்படி இருந்தால் தான் நாம் விபத்து இல்லாத பயணம் மேற்கொள்ள முடியும்.
இந்த 8 வழிச்சாலை அமைக்கின்றபோது கிட்டத்தட்ட 70 கிலோ மீட்டர் மிச்சமாகும். இதனால் எரிபொருள் மிச்சமாகும். மாசு ஏற்படுவது தவிர்க்கப்படும். சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும். நேரமும் குறைகிறது. பயண நேரம் மிச்சமாகிறது. அதுமட்டுமல்ல அந்த சாலைகள் விபத்து இல்லாத சாலையாக தொழில் நுட்பத்துடன் அமைக்கப்படும்.
இப்படிப்பட்ட சாலையை அமைக்கப்படும்போது தான் புதிய புதிய தொழிற்சாலைகள் வரும். இதனால் பொருளாதாரம் மேம்பாடு அடையும். வேலை வாய்ப்பு கிடைக்கும். மக்களுக்கு தேவையான பொருளாதார வசதி கிடைக்கும்.
இப்படிப்பட்ட ஒரு நலத்திட்டங்கள் வருகின்றபோது பொதுமக்கள் வரவேற்க வேண்டும். அப்படி வரவேற்றால் தான் நம்முடைய நாடு முன்னுக்கு வர முடியும். வெளி நாடுகள் விரைவு சாலைகளால் தொழில் வளம் பெற்றுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார். #cmedappadipalanisamy #chennai salemgreenexpressway
ஆத்தூர்:
சேலம் மாவட்டம் ஆத்தூரில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஆத்தூரில் 15 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. அதனை சரி செய்து அதிக அளவு குடிநீர் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
சேலம்- உளுந்தூர் பேட்டை நான்கு வழிச்சாலை பணிகள் முழுமையாக நிறைவு பெறவில்லை. இதனால் அதிக விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. சர்வீஸ் சாலைகள் துண்டு, துண்டாக உள்ளது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் பெருமளவில் பாதிக்கப்படுகின்றனர். இந்த சாலையை சீரமைத்தால் ஆட்சியாளர்கள் கூறுவதுபோல 3½ மணி நேரத்தில் சேலத்தில் இருந்து சென்னைக்கு செல்லலாம்.
தலைவாய்பட்டி கிராமத்தில் சாமுவேல் என்பவரது மகள் ராஜலட்சுமி கொடூரமான முறையில் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டுள்ளார். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்கி உதவிட வேண்டும். மேலும் குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை வழங்கிட வேண்டும்.
பசுமை வழி திட்டத்தை அரசு கைவிட வேண்டும். அதற்காக போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெறவேண்டும். 20 சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தல்களிலும் தேர்தல் நடத்திட தமிழக அரசு முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும். மத்தியில் பா.ஜ.க.வை வீழ்த்த வியூகம் வகுக்கப்பட்டு வருவது வரவேற்கத்தக்கது.
இவ்வாறு அவர் கூறினார். #gkvasan #bjp
சென்னை:
சென்னையில் இருந்து சேலத்துக்கு ஆத்தூர், உளுந்தூர்பேட்டை வழியாக ஒரு பாதையும், வேலூர், கிருஷ்ணகிரி வழியாக ஒரு பாதையும் ஏற்கனவே உள்ளன.
இருபாதைகளுமே மிகவும் சுற்றி செல்பவையாக இருக்கின்றன. எனவே, 3-வது பாதையாக சென்னையில் இருந்து போளூர், திருவண்ணாமலை, சேத்துப்பட்டு, அரூர் வழியாக கல்வராயன் மலையை கடந்து புதிய சாலை அமைக்க திட்டமிடப்பட்டது.
277 கி.மீட்டர் நீளம் கொண்ட இந்த சாலையை 8 வழி பாதையாக அமைக்க முடிவு செய்யப்பட்டது. மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலைத்துறை இந்த சாலையை ரூ.10 ஆயிரம் கோடி செலவில் அமைக்க ஏற்பாடுகள் செய்தது.
சாலைக்கான நிலத்தை கையகப்படுத்தும் பணி தொடங்கப்பட்டது. சாலை மொத்தம் 5 மாவட்டங்கள் வழியாக செல்கிறது. அனைத்து மாவட்டங்களிலும் நிலம் கையகப்படுத்துவதற்காக அளவீடு பணிகள் மேற் கொள்ளப்பட்டன.
ஆனால், இதற்கு சம்பந்தப்பட்ட விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் சுற்றுச்சூழல்கள், விவசாயம் கடுமையாக பாதிக்கப்படும் என கூறி பல்வேறு அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் 8 வழிச்சாலை திட்டத்துக்கு போர்க்கொடி உயர்த்தின.
திட்டத்தை எதிர்த்து 12 வழக்குகள் சென்னை ஐகோர்ட்டு உள்ளிட்ட பல்வேறு கோர்ட்டுகளில் தாக்கல் செய்யப்பட்டன. மேலும் மத்திய சுற்றுச்சூழல் துறையிடம் புகார் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து மத்திய சுற்றுச்சூழல் துறை ஏற்கனவே தேசிய நெடுஞ்சாலைத்துறையிடம் பாதிப்புகளை குறைத்து பணிகளை செய்வதற்கு உத்தரவிட்டது.
இதன் காரணமாக சாலை பணிகளில் பல மாற்றங்களை தேசிய நெடுஞ்சாலைத்துறை உருவாக்கியது.
ஏற்கனவே வனப்பகுதி அல்லாத இடங்களில் 90 மீட்டர் அகலத்துக்கு சாலை அமைக்க திட்டமிடப்பட்டு இருந்தது. அது, 70 மீட்டராக குறைக்கப்பட்டது. வனப்பகுதியில் 50 மீட்டராக குறைக்கப்பட்டது.
மேலும் வனப்பகுதியில் 13¼ கி.மீட்டர் தூரத்துக்கு சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டு இருந்தது. அது, 9 கி.மீட்டராக குறைக்கப்பட்டது. இத்துடன் வனப்பகுதியில் 120 ஹெக்டேர் நிலம் சாலைக்காக பயன்படுத்த முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. அது, 45 ஹெக்டேராக குறைக்கப்பட்டது.
ஆனாலும் கூட, இந்த சாலை திட்டத்துக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஐகோர்ட்டில் நடந்த வழக்கு விசாரணைகளிலும் நீதிபதிகள் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்த வண்ணம் உள்ளனர்.
இதையடுத்து மத்திய சுற்றுச்சூழல் துறையின் மதிப்பீட்டு நிபுணர்கள் குழு இது சம்பந்தமாக மீண்டும் ஆய்வு செய்தது. இதற்கான கூட்டம் கடந்த 30, 31-ந் தேதிகளில் நடந்தன.
அப்போது இந்த சாலை பணிகள் தொடர்பாக விரிவாக ஆலோசிக்கப்பட்டது. அதில், பல்வேறு முடிவுகளை எடுத்துள்ளனர்.
அதன்படி சாலை அமைப்பது தொடர்பாக புதிதாக 2 விதமான ஆய்வுகளை நடத்த வேண்டும் என்று தேசிய நெடுஞ்சாலைத் துறைக்கு மத்திய சுற்றுச் சூழல்துறை மதிப்பீட்டு நிபுணர் குழு உத்தரவிட்டுள்ளது.
மலைப்பகுதியில் சுற்றுச் சூழல் முறைகள் பாதிக்காமல் இருக்கவும், சமூக பொருளாதார நிலைகள் பாதிக்கப்படாமல் இருக்கவும், அதற்கு தகுந்த மாதிரி இந்த ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும்.
அரசின் பொருத்தமான நிறுவனங்கள் மூலம் இந்த ஆய்வுகளை செய்ய வேண்டும் என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
இதுபோன்ற ஆய்வுகளை செய்யக்கூடிய தகுதி உள்ள அரசு நிறுவனங்களாக தேசிய சுற்றுச்சூழல் அரசு ஆராய்ச்சி மையம், ஜி.பி. பந்த் தேசிய இமாலயன் சுற்றுச்சூழல் வளர்ச்சி நிறுவனம் ஆகியவை உள்ளன.
இந்த நிறுவனங்களில் ஏதாவது ஒன்றிடம் இந்த பணிகளை ஒப்படைக்கலாம் என்றும் அந்த குழு யோசனை தெரிவித்துள்ளது.
இதுபற்றி முழுமையாக ஆய்வு செய்து மத்திய சுற்றுச்சூழல் நிபுணர் குழுவுக்கு அறிக்கை தர வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் தேசிய நெடுஞ்சாலைத்துறை 8 வழிச்சாலை திட்டம் தொடர்பாக இன்னும் 2 வகையான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
எனவே, 8 வழிச்சாலை திட்டத்தில் இன்னும் பல மாறுதல்கள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. இதன் காரணமாக சாலை அமைக்கும் பணி நடப்பதற்கு மிகவும் கால தாமதம் ஆகும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
புதிய ஆய்வுகள் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டாலும் ஏற்கனவே கோர்ட்டில் வழக்குகள் உள்ள தால் அதன் தீர்ப்புக்கோ அல்லது நடுவர்மன்ற தீர்ப்புகளுக்கோ கட்டுப்பட வேண்டும் என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டு இருக்கிறது. #GreenExpressway #HC
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்